சென்னை: அண்மையில் சிறையிலிருந்து பிணையில் வெளி வந்த செய்தியாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘யூ டியூப்’ சேனல்களில் அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர். ஆளும் திமுக தரப்பினர் மீது அவர் பல்வேறு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் பெண் காவலர்களை அவர் அவதூறாக பேசியதாக வழக்குபதிவானது.
மேலும் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகக்கூறி சவுக்கு சங்கரை கைது செய்தது காவல்துறை. மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. ஆனால் சவுக்கு சங்கர் தன் மீதான வழக்குகளை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொண்டு அண்மையில் பிணையில் விடுதலையானார்.
அதன் பிறகும் ஆளும் தரப்பினர் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேட்டியளித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.