திருச்சி: வளைகுடா நாடுகளில் நிலவி வந்த பதற்றமான சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சி - துபாய் இடையேயான விமானச் சேவை, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு நாள்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வளைகுடாப் பகுதியில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாகப் பாதுகாப்பு கருதி விமானச் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதனால், தென்தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக வேலை நிமித்தமாகச் செல்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
தற்போது நிலைமை சீராகியுள்ளதை அடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது துபாய் விமானச் சேவையை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
இதுகுறித்துத் திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தச் சேவையானது வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் வளைகுடா நாடுகளுக்குச் செல்லக் காத்திருந்த பயணிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

