திருச்சியில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமானச் சேவை தொடக்கம்

திருச்சியில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமானச் சேவை தொடக்கம்

2 mins read
944359ef-4435-4508-ae84-c8dc2a7092a4
திருச்சி - துபாய் இடையேயான விமானச் சேவை, மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே

திருச்சி: வளைகுடா நாடுகளில் நிலவிவந்த பதற்றமான சூழல் காரணமாக ரத்துச் செய்யப்பட்டிருந்த திருச்சி - துபாய் இடையேயான நேரடி விமானச் சேவை, ஏறக்குறைய 50 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு நாள்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதி வளைகுடாப் பகுதியில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாகப் பாதுகாப்புக் கருதி விமானச் சேவைகள் திடீரென ரத்துச் செய்யப்பட்டன.

இதனால், தென்தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக வேலை நிமித்தமாகச் செல்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர்.

தற்போது நிலைமை சீராகியுள்ளதை அடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது துபாய் விமானச் சேவையை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்துத் திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அபுதாபி, ஷார்ஜா போன்ற பிற நகரங்களுக்கான சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தத் தற்காலிக அட்டவணை வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள், ஏற்றுமதியாளர்கள் நிம்மதி

நேரடி விமானச் சேவைகள் தடைபட்டதால், கடந்த இரண்டு மாதங்களாகப் பயணிகள் சென்னை அல்லது கொழும்பு வழியாகச் செல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதனால் பயணிகளுக்குக் கூடுதல் செலவும் நேர விரயமும் ஏற்பட்டது.

அதேபோல், திருச்சியிலிருந்து துபாய்க்குக் காய்கறிகள், பழங்கள், பூக்களை ஏற்றுமதி செய்யும் வணிகர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர்.

இதுகுறித்துக் காய்கறி ஏற்றுமதியாளர் வி. ஆனந்த் கூறுகையில், “துபாயில் எங்களது காய்கறிகளுக்குப் பெரும் தேவை உள்ளது. நேரடி விமானம் இல்லாததால் சென்னை வழியாக ஏற்றுமதி செய்துவந்தோம். தற்போது மீண்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது எங்களுக்குப் பெரிய நிம்மதியைத் தந்துள்ளதோடு, வர்த்தகம் மீண்டும் சூடுபிடிக்க உதவும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்