நிர்வாகிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பதவி: தவெக அறிவிப்பு

1 mins read
ce7917f0-5ba2-4dcc-b826-cac2ecc25603
தவெக கட்சித் தலைவர் நடிகர் விஜய். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொடர்ந்து தனது கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தனது கட்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்று தவெக கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக ‘நியூஸ் 18’ ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய ஐந்து பதவிகளுக்கும் பொறுத்தமான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.

ஏராளமானோர் விண்ணப்பப் படிவங்களை ஆர்வத்துடன் பெற்றுச் சென்றதாகவும் அந்தப் படிவத்துடன் தேர்தல் நெறிமுறைகள் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில், நிர்வாகிகளின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியில் 100 முதல் 110 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்துடன் ஓராண்டு காலம் ஆகவுள்ள நிலையில், அதற்குள் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்துக்கு கட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தவெக கட்சிக்கான மாவட்ட நிர்வாகிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்