தமிழகத்தில் அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது

1 mins read
6d496c18-e8c6-4dee-ad68-9a6377808e15
சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். - கோப்புப் படம்: தினகரன்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அஞ்சல்வழி வாக்குப்பதிவுப் பணி தொடங்கியது. இந்தப் பணி மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வசதிக்காக அஞ்சல்வழி வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பணியில் உள்ளவர்களும் தங்கள் வாக்குகளை அஞ்சல்வழி செலுத்த முடியும்.

தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஏப்ரல் 11 முதல் மூன்று நாள்களுக்கு வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் முன்பே அறிவித்திருந்தது.

இதற்கான பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர்கள், காவலர், ஒளிப்பதிவாளர் ஆகியோரைக் கொண்ட குழு வீடு தேடி வந்து அஞ்சல் வாக்குகளைச் சேகரிப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

அஞ்சல் வாக்குகள் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்தச் செயல்முறை, அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ரகசியத்தன்மை காக்கப்பட்டு, காணொளிப் பதிவுடன் நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்படும்.

குறிப்புச் சொற்கள்