மதுரை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள வேளையில் மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அதனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்யுமாறும் தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) மனு அளித்துள்ளது.
இதுகுறித்து, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் ஜெயசிங் பேசுகையில், “மதுரை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளேன்.
“திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், ஏற்கெனவே நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளை அந்த அதிகாரிகள் மீறியுள்ளனர். உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, இதே மாவட்ட ஆட்சியர் 144ஆவது பிரிவு நடவடிக்கைகளை வெளியிட்டார்.
“அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இவர்கள் இருவரையும் மதுரையிலிருந்து வேறு இடங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அவர்களை இடமாற்றம் செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தையும் அணுகுவேன்,” என்று ஜெயசிங் கூறியுள்ளார்.

