சென்னை: விடிய விடிய கொட்டித் தீர்த்த, பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின.
சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் மழை மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று வடமேற்குத் திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொள்ளும் என்றும் அடுத்த சில நாள்களுக்குத் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், பெருமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் முன்கூட்டியே வாங்கி வைக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் கடைகளில் திங்கட்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
வீடுகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடிக்க உதவி எண்
சென்னையில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும் ஆபத்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மழைநீரோடு பாம்புகளும் விஷப்பூச்சிகளும் புகும் ஆபத்துள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதையடுத்து பாம்புகளைப் பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மின்கம்பி அறுந்து நால்வர் உயிரிழப்பு
சிவகங்கை, கடலூர் பகுதிகளில் திங்கட்கிழமை ஒரே நாளில், கீழே விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த 13 வயது சிறுமி உட்பட நான்கு பேர் மாண்டுவிட்டனர்.
இதற்கு அரசின் அலட்சியப்போக்குதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கொள்ளிடம், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கடலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணைக்குத் தற்போது 18,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அணை நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
மழை, வெள்ளப்பெருக்கு குறித்து வதந்திகள் பரப்பக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
“கைப்பேசி, மின்னூட்டி, எண்ணெய் விளக்கு, தீப்பெட்டி, மெழுகுவத்தி ஆகியவற்றை தயாராக வைத்திருக்கவும் விலை உயர்ந்த பொருள்கள், ஆபரணங்கள், உணவுப் பொருள்களை நீர்புகாத பைகளில் வைத்து பாதுகாக்கவும்.
“வாகனங்களைப் பாதுகாப்பான உயரத்தில் நிறுத்தவேண்டும். முதலுதவிப் பெட்டியைத் தயார் நிலையில் வைத்திருங்கள். கூடுமானவரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும்,” என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபடும் 21,000 காவல்துறையினர்
மீட்புப் பணியில் காவல்துறையைச் சேர்ந்த 21,000 பேர் தயார் நிலையில் உள்ளதாக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்புப்பணியில் ஈடுபடவுள்ள அனைவருக்கும் அதிதீவிர படை பயிற்சிப் பள்ளியில் மீட்புப் பணிகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த 21,000 பேரும் மாநகரம், மாவட்டங்களுக்கு 136 குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் காவல்நிலையங்கள், மாநகர பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளும் தொடர்ந்து செயல்படும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் ஆறு பேரிடர் குழுக்கள்
சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலா 25 வீரர்களுடன் மூன்று குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
அதேநேரம், பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால் திருநெல்வேலியில் இருந்து மூன்று குழுக்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஆறு குழுக்கள் என 150 வீரர்கள் மீட்புப் பணிக்குத் தயார் நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் கடந்தாண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியில் உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் புகார்
தமிழக அரசு வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களைக் காப்பதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு வெளியிடும் தொடர் எச்சரிக்கைகள் காரணமாக சென்னை மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். சென்னையிலும் அதன் புறநகர் மாவட்டங்களிலும் அடுத்த நான்கு நாள்களுக்கு 40 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆங்காங்கே மழைநீர் வடிகால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட பணிகள் காரணமாக கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகள் அகற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
40 சென்டி மீட்டர் மழை பெய்தால் அதிக பாதிப்புகள் இருக்கும்: அமைச்சர்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களுக்காக 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அம்முகாம்களில் பால், பிஸ்கெட் ஆகியவை தயார் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆயிரம் இடங்களில் மோட்டார்கள், 57 டிராக்டர்களுடன் கூடிய பம்பு செட்டுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மழைக் காலப்பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறுகிய நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்தால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், 40 சென்டி மீட்டர் மழை பெய்தால் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றார் அவர்.

