சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக மாவட்டச் செயலாளர்களிடம் வாக்கெடுப்பு முறையில் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்கும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
“எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தேர்தலையொட்டி நிறைய அறிவிப்புகள் வெளியாகும். தமிழகத்தில் தற்போது நான்குமுனைக் கூட்டணி உள்ளது. இதையும் கடந்து இன்னொரு கூட்டணி அமையுமா என்பது தெரியாது,” என்றார் பிரேமலதா.
அனைத்துக் கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் உரிய நேரத்தில் தேமுதிகவின் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
“அடுத்து அமையும் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்புள்ளது. திமுக ஆட்சியை அகற்ற கட்சிகள் இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
“எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அதை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கான விடை கூட்டணி அமையும் போதுதான் தெரியவரும்,” என்றார் பிரேமலதா.
முன்னதாக, கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளைக் குறிப்பிட்டு எழுதிய கடிதங்களைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் போட்டனர்.

