பிரதமர் மோடி வருகை; திருப்பரங்குன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகை; திருப்பரங்குன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

2 mins read
ரூ.7,100 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
880dfad1-d51c-49a8-9e5f-83a9980789da
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: தினமணி

சென்னை: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு தமிழகம் செல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) ஒன்றிய ஆட்சிப்பகுதியான புதுச்சேரியிலும் பின்னர் மதுரையிலும் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று, ஏறக்குறைய ரூ.7,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு வளையம்

ஞாயிறு மாலை மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்ய உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருதி கோயிலைச் சுற்றிலும் கைப்பேசி சமிக்ஞைகளைத் தடுக்கும் நவீன ‘ஜாமர்’ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்தர்களும் பொது மக்களும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவிகளின் பலத்த சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சனிக்கிழமை காலையில் இருந்து சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் தமிழகக் காவல்துறையினரும் கோயிலின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரிக்குச் செல்லும் பிரதமர், அங்கு ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு மதுரை செல்லும் பிரதமர், அங்கு ரூ.4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின்னர், மாலை 5 மணி அளவில் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழகத்திற்குக் கிடைக்கும் புதிய திட்டங்கள்

மரக்காணம் - புதுச்சேரி, பரமக்குடி - ராமநாதபுரம் இடையிலான புதிய நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

‘அமிர்த பாரத்’ திட்டத்தின்கீழ் மறுசீரமைக்கப்பட்ட தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, மொரப்பூர், பொம்மிடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களை அவர் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒலிபரப்புச் சேவையை வலுப்படுத்த கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய இடங்களில் மூன்று புதிய ‘ஆகாஷ்வாணி எஃப்.எம் ரிலே டிரான்ஸ்மிட்டர்’களைத் தொடங்கி வைக்க உள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை நிலவி வந்த நிலையில், பிரதமரின் இந்த வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்