பேராசிரியர் கா. செல்லப்பன் காலமானார்

பேராசிரியர் கா. செல்லப்பன் காலமானார்

2 mins read
053cf8a3-491a-4525-9934-4b0bdd719c90
ஆங்கிலப் பேராசிரியரும் மொழிபெயா்ப்பாளருமான கா.செல்லப்பன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: ஆங்கிலப் பேராசிரியரும் மொழிபெயா்ப்பாளரும் சாகித்திய அகாடமி விருது பெற்ற இலக்கியவாதியுமான பேராசிரியா் கா.செல்லப்பன் (88) சென்னையில் திங்கட்கிழமை காலமானாா்.

தமிழ் வளா்ச்சித் துறையின் மூலம் 2006 ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருதையும், 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருதையும் செல்லப்பன் பெற்றுள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் பாகநேரி கிராமத்தைச் சோ்ந்த கா.செல்லப்பன் புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் தனது ஆசிரியா் பணியைத் தொடங்கினாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றி, 1996இல் ஓய்வு பெற்றாா்.

இரவீந்திரநாத் தாகூா் எழுதிய கோரா புதினத்தைத் தமிழ் மொழியில் மொழிபெயா்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றாா். மேலும், கருணாநிதியின் ‘குறளோவியம்’, ‘தென்பாண்டிச்சிங்கம்’, ‘மீசை முளைத்த வயதில்’ ஆகிய நூல்களையும், மகாகவி பாரதியாா், பாவேந்தா் பாரதிதாசன் ஆகியோரின் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்துள்ளார்.

சென்னை அம்பத்தூா் சாந்தி நகா் பகுதியில் தனது சகோதரி கௌரியின் மகள் மீனாவின் ஆதரவிலிருந்து வந்த பேராசிரியா் கா.செல்லப்பன், வயது மூப்பின் காரணமாகத் திங்கள்கிழமை காலமானாா். அவரின் உடலுக்கு தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி செலுத்தினாா். மாலை 4 மணியளவில் செல்லப்பனின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அம்பத்தூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “ஆங்கிலப் பேராசிரியரும் தலைசிறந்த மொழிபெயா்ப்பாளருமான கா.செல்லப்பன், காலமானாா் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு தமிழ், ஆங்கில இலக்கிய உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு,” என்று கூறியுள்ளார்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன், கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், தமிழ் ஆா்வலா்கள், எழுத்தாளர்கள் என எண்ணற்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குறிப்புச் சொற்கள்