புதுக்கோட்டையில் ரூ.100 கோடிக்குத் திட்டங்கள்: 14,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டையில் ரூ.100 கோடிக்குத் திட்டங்கள்: 14,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

1 of 4
படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
படம்: மாலை மலர்
படம்: மாலை மலர்
படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

02 Nov 2026 - 8:05 pm

2 mins read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய், ரூ.100 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ.23 கோடியில் கட்டப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஏறக்குறைய 14,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த முதல்வர் விஜய், அங்கிருந்து 49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டைக்குச் சாலை வழியாகச் சென்றபோது, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கையசைத்து அன்பை வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகைதந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தொடங்கியது.

புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பல்வேறு உள்கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்த திரு விஜய், 104 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், தையல் இயந்திரங்கள், டிராக்டர்கள், வேளாண் கருவிகள், கல்விக்கடன்கள், வங்கிக் கடனுதவிகளை நேரடியாக வழங்கினார்.

நான்கு கோடி ரூபாயில் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கமும் அவரால் திறந்து வைக்கப்பட்டது.

விஜய் காரை மறித்து மக்கள் போராட்டம்

இதனிடையே, முதல்வர் சென்ற காரை திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, செம்பட்டு என்எம்டி காலனி பகுதியில், மூன்று தலைமுறைகளாக வசித்துவரும் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களின் குடியிருப்பு உரிமையைப் பாதுகாக்கக் கோரி, திங்கட்கிழமை (நவம்பர் 2) திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் இயங்கிவந்த தோல் பதனிடும் தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் சிலர் விலைக்கு வாங்கிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மேலும், 10 நாள்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனக் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழக முதல்வர், அவரது பாதுகாப்பு வாகனங்களை திடீரென வழிமறித்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் விஜய், பிரச்சினை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைச் சாலை ஓரமாக நிற்கச் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்