சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி: மாநகராட்சி விளக்கம்

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி: மாநகராட்சி விளக்கம்

கோப்புப் படம்: தினமணி

13 Aug 2026 - 4:50 pm

2 mins read

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் கட்டட உரிமையாளர்களுக்கு இந்த அரையாண்டிற்கான சொத்து வரி மதிப்பீடு பல மடங்கு உயர்ந்திருப்பது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா நகர் உள்ளிட்ட முக்கியமான குடியிருப்புப் பகுதிகளில், கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்திய கட்டட உரிமையாளர்களுக்கு இந்த ஆண்டு ரூ. 28,000 வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி, இரண்டு முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பொதுமக்கள் தங்களது கடுமையான அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாகச் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும் செயற்கைக்கோள் தரவுகள், அரசுப் பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், பரப்பளவைக் குறைவாகவோ தவறாகவோ கணக்கிட்டு வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட வரி மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வரி மதிப்பீட்டில் ஆட்சேபனை அல்லது முரண்பாடுகள் இருப்பதாகக் கருதும் கட்டட உரிமையாளர்கள், அறிவிப்பு வந்த 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டலத் துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 30 நாள்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகே சொத்து வாங்கப்பட்டது என்றும் இப்போது திடீரென 250 விழுக்காடு வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது நியாயமற்றது என்றும் பொதுமக்கள் தரப்பில் குறைகூறுகள் எழுந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்