சென்னை: தமிழகத்தில் சொத்து வரி ஆறு விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊடகங்களில் சொத்து வரி உயர்வு தொடர்பாக வெளியான தகவல்களை யாரும் நம்பத் தேவையில்லை என உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் 15வது நிதிக்குழு நிபந்தனைகளின்படி, ஒவ்வோர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப, சொத்து வரி வருவாயை உயர்த்த வேண்டும் என்பது விதிமுறை.
இதைப் பின்பற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மத்திய நிதிக்குழு சார்பில் மானியங்கள் வழங்கப்படும் என்பது நடைமுறை.
இந்த விதிமுறைக்கு ஏற்ப, கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் சொத்து வரிகள் 6% வரை உயர்த்தப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் நகராட்சி நிர்வாகத் துறையால் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
அண்மைக் காலமாக, தமிழகத்தில் பத்திரப்பதிவு மூலம் வரும் வருவாய் அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சொத்து வரி அடுத்தடுத்து உயர்த்தப்பட்டதாக வெளிவந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், சராசரியாக 11.5% சொத்து வரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று 15வது நிதிக்குழு தெரிவித்ததாக கடந்த முறை தமிழக உள்ளாட்சித் துறை கூறியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் வரி உயர்த்தப்பட்ட பின்னர், செலுத்த வேண்டிய தொகை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக சொத்துடைமையாளர்கள் கூறிவருகின்றனர்.