சென்னை: உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 7 மில்லியன் பேர் புகையிலை தொடர்புடைய பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.
மக்கள் விழிப்புடன் இருக்க உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நுரையீரல் நிபுணர் மருத்துவர் நரசிம்மன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
‘இளையர்களைப் புகையிலை, நிக்கோட்டின் பழக்கத்திலிருந்து பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மருத்துவர் நரசிம்மன் கூறினார்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் புகையிலையை நேரடியாக உட்கொள்வது மூலமாகவும், 1.6 மில்லியன் பேர் மறைமுகமாகவும் உயிரிழக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
“தற்போது பெரியவர்கள் மத்தியில் புகை பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மின்சிகரெட் கலாசாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது,” என்று மருத்துவர் நரசிம்மன் கவலை தெரிவித்தார்.
“புகையிலையை உட்கொள்வதை விட மின்சிகரெட் பாதுகாப்பானது என்ற தவறான எண்ணம் உள்ளது. புகையிலையைப் புகைப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் மின்சிகரெட் மூலமாகவும் வரும்.
“இது இளையர்களின் மூளை வளர்ச்சியையும், மனநலத்தையும் பாதிக்கிறது. மேலும் மற்ற போதைப்பழக்கத்துக்குத் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்துவிடுகிறது,” என்று திரு நரசிம்மன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நீண்ட காலமாக புகைபிடிப்பவர்களில் 50 விழுக்காட்டினர் புகையிலை தொடர்பான நோய்களால்தான் உயிரிழக்கின்றனர்.
புகைபிடித்தல் என்பது நுரையீரல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், காச நோய் மற்றும் பல்வேறு சுவாச நோய்களுக்கு நேரடி காரணமாகவும் உள்ளது.
“பள்ளி-கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இளையர்களை ஆரம்ப கட்டத்திலேயே புகைப் பழக்கத்தில் இருந்து தடுத்துவிட்டால், அவர்களுடைய எதிர்காலம் புகையில்லா எதிர்காலமாக, ஆரோக்கியமானதாக இருக்கும்,” என்று மருத்துவர் நரசிம்மன் சொன்னார்.
பெற்றோரும் ஆசிரியர்களும் புகையிலை இல்லாத முன்னுதாரணங்களாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

