கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் அக்டோபர் 27ஆம் தேதி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும் அந்தக் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசுகையில், ஈஷாவுக்கு எதிராகச் செய்தி வெளியிடும் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் நாக்கு அறுக்கப்படும் என்று கடுமையாகப் பேசியிருந்தார்.
நக்கீரன் கோபால் பற்றி ஓம்கார் பாலாஜி அவதூறாகப் பேசியது குறித்து காவல்துறையில் திமுக பிரமுகர் ஒருவர் புகார் செய்தார் என்று கூறப்படுகிறது.
அந்தப் புகாரின் அடிப்படையில், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கில் முன்பிணை கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ஓம்கார் பாலாஜியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்கு ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியைக் கோயம்புத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்குக் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருந்தும், சட்டத்தை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 25 பேரைக் காவல்துறை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்னர் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

