மதுரை: ஆர்ப்பாட்டங்களை நடத்துமுன் முன்அனுமதி கோர வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவரான அய்யாக்கண்ணு தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கிறார்.
விவசாயிகளின் கோரிக்கை தொடர்பில் போராட்டம் நடத்துவதற்காக டெல்லிக்குச் செல்வதைத் தடுக்கக்கூடாது எனக் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதைத் தடுப்பது, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகத் திருச்சியிலிருந்து ரயிலில் புறப்பட்டோம்.
“ஆனால், காவல்துறையினர் கட்டாயப்படுத்தி என்னையும் எங்கள் சங்க உறுப்பினர்களையும் ரயிலிலிருந்து இறக்கிவிட்டனர்,” என்று திரு அய்யாக்கண்ணு தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அம்மனு நீதிபதி பி. புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மனுதாரர் சில ஆண்டுகளுக்குமுன் டெல்லியில் 100 நாள்கள் போராட்டம் நடத்தினார். அப்போது, மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள், மூத்த குடிமகன்களை வைத்து அரை நிர்வாணப் போராட்டம் போன்ற ஆபத்தான வழிகளில் அவர் போராட்டங்களை நடத்தினார். போராட்டம் தொடர்பில் விதிக்கும் நிபந்தனைகளை மீறி அவர் செயல்படுகிறார்,” என அரசுத் தரப்பு வாதிட்டது.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புகழேந்தி, “பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணம் செய்தல் போன்ற சில சூழ்நிலைகளில் மட்டுமே பயணிகளை கீழே இறக்கிவிட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணி ஒருவர் போராட்டம் நடத்தச் செல்கிறார் என்பதற்காக அவரைப் பாதியில் இறக்கிவிட சட்டம் அனுமதிக்காது. அப்படி இறக்கிவிடப்பட்டால், அது குற்றம். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதே நேரத்தில், “அமைதியாக போராடுவதற்கான உரிமையே அரசியலமைப்பில் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதைவிடுத்து, கைப்பேசிக் கோபுரங்களில் ஏறுதல், பொதுப் போராட்டங்களின்போது மண்டை ஓடு போன்றவற்றைப் பயன்படுத்துதல், மூத்த குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் போன்றவை சட்டபூர்வமான போராட்ட வழிகளுடன் பொருந்தா.
“ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்அனுமதி கோர வேண்டும். போராட்டங்களின்போது காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் திரு அய்யாக்கண்ணுவின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.