தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெகுநாள்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

1 mins read
cdf3d7be-73fd-4ecf-9088-489aac71cb08
கோரப்படாமல் சாலையில் நீண்டநாள்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. - படம்: தி இந்து

சென்னை: சாலையோரம் நீண்டகாலமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பின் அதுகுறித்துப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பழுதடைந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் திருட்டு வாகனங்களையும் சாலையோரங்களில் நிறுத்திவைப்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது.

அத்துடன், சாலையோரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் பழைய வாகனங்களில் தேங்கும் நீரிலிருந்து டெங்கிக் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பெருகுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, சாலையோரப் பகுதிகளில் வெகுநாள்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றுவதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வகையில், “சாலையோரம் நீண்டநாள்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அத்தகைய வாகனங்கள் தொடர்பில் மாநகராட்சியின் @chennaicorp என்ற ‘எக்ஸ்’ ஊடகப் பக்கம் வழியாகவும் 1913 என்ற மாநகராட்சிப் புகார் தொலைபேசி எண் வழியாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்,” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் சாலையோரமாக நீண்ட நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஐயாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் அகற்றப்பட்டு, ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்