தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி வெளியீடு

2 mins read
f07b20e2-8352-46a4-befb-c0b420c56064
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) வெளியிட்டார்.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ் - இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் முதல் தொகுதி வெளியீடு கண்டது.

கடந்த 2022 ஜூலை முதல் செயல்பட்டு வரும் தமிழுக்கும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை ஆய்வு செய்யும் திட்டத்தில் 20 அறிஞர்கள் பணிசெய்து வருகின்றனர். இத்திட்டத்தைச் செயல்படுத்த 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தோ - ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வேர்ச்சொற்களில் உருவானதென ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் வால்டர் ஸ்கீட் (Walter Skeat) கண்டுபிடித்துள்ளார். இந்த 461 வேர்ச்சொற்களில் 300 வேர்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிடத் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்தது.

இத்திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) வெளியிட, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குநர் சுகந்தா தாஸ் பெற்றுக்கொண்டார்.

முன்னுரை நூல், தமிழுக்கும் இந்தோ–ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றி இத்தாலிய அறிஞர் அல்பெரடோ டிரோம்பெட்டி (Alfredo Trombetti), ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் (Max Muller), அயர்லாந்து அறிஞர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), டென்மார்க் அறிஞர் ஹோல்ஞர் பெடர்சன் (Holger Pederson), ரஷ்ய அறிஞர் இல்லிச் விட்ச் (Illich-Svitych), அமெரிக்க அறிஞர்கள் ஸ்டீபன் ஹில்யர் லெவிட் (Stephen Hillyer Levitt), ஆலன் பாம்ஹார்டு (Allan Bomhard) உள்ளிட்ட மொழி அறிஞர்களின் கருத்துகளுடன் இத்திட்டத்தின்கீழ் வெளிவரவுள்ள 12 தொகுதிகளையும் கற்பதற்கான வாயிலாக (gateway) அமைந்துள்ளது.

முதல் தொகுதி நூலில் 19 தமிழ் வேர்ச்சொற்களிலிருந்து இலத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் மற்றும் சமஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற பல கீழை இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் உருவான வரலாறு, கருதுகோள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்