புதுவை: புதுவை விமான நிலையம் அனைத்துலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரிய ரக விமானங்கள் வந்துசேரும் வகையில் அதன் உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் என புதுவை விமான நிலைய இயக்குநர் கே.ராஜசேகர் ரெட்டி தெரிவித்தார்.
விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்ததும், முக்கியமான நகரங்களுடன் புதுவை நேரடியாக விமானங்கள் மூலம் இணைக்கப்படும் என்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் புதுவை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“குறிப்பாக, உள்ளூர் பொருளியல் மேம்படும், சரக்கு போக்குவரத்து வசதிகளுக்கு வழிவகை செய்யப்படும், வர்த்தக ரீதியாக புதுவைக்கும் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் பெரும் பயனளிக்கும்,” என ராஜசேகர் ரெட்டி கூறினார்.
இத்திட்டத்துக்காக 402 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது புதுவை விமான நிலையத்தில் ஏறக்குறைய 1,500 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதைப் பயன்படுத்தி சிறிய விமானங்கள் மட்டுமே இயக்க முடியும். போயிங், ஏர் பஸ் போன்ற விமானங்களை புதுவையில் இருந்து இயக்க 2,300 மீட்டர் நீள ஓடுபாதை தேவைப்படுகிறது. எனவே, தற்போதுள்ள ஓடுபாதைக்குப் பதிலாக புதிய, நீண்ட ஓடுபாதையை அமைக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஏறக்குறைய 217 ஏக்கரும் புதுவையில் இருந்து 185 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன.
விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலங்களைக் கையகப்படுத்த ரூ.1,500 கோடி வரை செலவாகும் என்றும் இத்தொகையை புதுவை அரசு ஏற்கும் என்றும் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதிய ஓடுபாதை, முனையங்களை அமைக்க, ரூ.1,500 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை செலவாகும். இந்தத் தொகையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஏற்கும்.
மத்திய அரசின் நேரடி ஆதரவு, நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்கான முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

