சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தமிழக கல்வித்தரமானது தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டதாக ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்விக்காக அந்நாள்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததாக குறிப்பிட்டார்.
“கல்விதான் நம் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராசர்.
“காமராசர்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்,” என்றும் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
ஆனால் காமராசர் அமைத்த அடித்தளமானது துரதிர்ஷ்டவசமாக இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் 60 விழுக்காடு மாணவர்கள் படிக்கக்கூடிய அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் கீழே சென்று விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75 விழுக்காட்டினர் இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் 40 விழுக்காடு மாணவர்களால் அவர்களது பாடப் புத்தகங்களையே படிக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டார்.
“அண்மைய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்களும் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும்,” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சினையாக போதைப் பொருள்கள் உருவெடுத்து இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையே, ஆளுநரின் கருத்துக்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமலில் உள்ள பாடத்திட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தினார்.
“‘சந்திரயான் 3’ திட்டத்தை உலகமே வரவேற்று வியந்தது. இத்திட்டத்தின் இயக்குநராக இருந்த வீரமுத்துவேல் தமிழ் வழிகல்வி கற்றவர். அரசுப் பள்ளியில் பயின்றவர்.
“இவர் மட்டும் அல்லாமல் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 90 விழுக்காடு விஞ்ஞானிகள் தமிழ் வழியில் பயின்றவர்கள். இது ஆளுநருக்குத் தெரியாதா,” என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே வயிற்றெரிச்சல் உள்ளவர்கள்தான் தமிழகத்தில் உள்ள பாடத் திட்டத்தை குறைசொல்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிறந்த கல்விமுறை என ஒன்று இருக்கிறது என்றால் அது கலைஞர் தந்த கல்விமுறைதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் கல்விமுறையை யாரும் குறைசொல்வதை ஏற்க இயலாது என்றும் அவ்வாறு குறை சொன்னால் அது மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவமதிப்பதற்கு சமம் என்றும் அவர் கூறியுள்ளார்.