சென்னை: ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளதால் அந்நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதுவரையில் இவ்வளவு மழை அங்கு ஒருபோதுமே பெய்தது இல்லை. வீடுகளையும் சாலைகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
குடிநீரோ, அத்திவாசிய தேவைக்கான தண்ணீரோ கிடைக்காமல் மக்கள் கடும் வேதனையில் உள்ளனர்.
அங்கு வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தேசிய, மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுக்களும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்விநியோகத்தை சீரமைக்க 10,000 மின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மூன்று மாவட்டங்களில் 7,826 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் 3.18 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
விழுப்புரம் ,விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.50 கோடி மதிப்பிலான விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி
சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 கிராமங்களில் ஆற்று வெள்ளம் புகுந்து மக்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாகூர் ஏரி உடையும் அளவுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி உதவிகளை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடலூர் தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குண்டு குப்பளவாடி பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஏற்காட்டில் பல பகுதிகளில் மண் சரிந்துள்ள நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.