சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கை திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை (ஜூன் 25) சோதனை நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப் பணித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் அமைச்சர் எ.வ. வேலு. அப்போது அத்துறையில் ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற லஞ்சம் கொடுக்கச் சேர்ந்ததாக ஒப்பந்ததாரர்கள் சிலர் அண்மையில் புகார் எழுப்பினர்.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த எ.வ. வேலு, தற்போது திமுக சட்டமன்ற கொறடாவாகவும் திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.


