தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் ரூ.20,800 கோடியில் ரயில் திட்டங்கள்

தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் ரூ.20,800 கோடியில் ரயில் திட்டங்கள்

2 mins read
05e820d2-cd29-4689-8950-fa5c6dff306a
தமிழகத்தில் 4வது ரயில் வழித்தடம் திட்டங்கள் மூலம் ஒகேனக்கல், கொடைக்கானல், மேட்டூர் அணை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட முக்கியச் சுற்றுலா, ஆன்மீகத் தலங்களுக்கான ரயில் இணைப்பு வசதி கணிசமாக மேம்படும்.  - கோப்புப்படம்: டெக்கான் கிரானிக்கல்

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ரூ.20,804 கோடி மதிப்பீட்டில் எட்டுப் பன்முக ரயில் வழித்தடத் திட்டங்களுக்குப் பொருளியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் ரூ.10,021 கோடி செலவில் ஐந்து முக்கியமான வழித்தடத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

பிரதமரின் ‘கதி சக்தி’ தேசியப் பெருந்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டங்கள் மூலம், அம்மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்கள் நேரடியாகப் பலனடைய உள்ளன. இதன்மூலம் தற்போதைய ரயில்வே வலையமைப்பில் ஏறக்குறைய 540 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதைகள் சேர்க்கப்படும்.

தமிழகத்தில் அரக்கோணம்-ரேனிகுண்டா இடையே மூன்று, 4வது ரயில் வழித்தடம் (77 கிலோ மீட்டர்), ஓசூர்-ஓமலூர் இடையே இரட்டை வழித்தடம் (147 கிலோ மீட்டர்), சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே இரட்டை வழித்தடம் (159 கிலோ மீட்டர்) ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டங்கள் மூலமாக ஒகேனக்கல், கொடைக்கானல், மேட்டூர் அணை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட முக்கியச் சுற்றுலா, ஆன்மீகத் தலங்களுக்கான ரயில் இணைப்பு வசதி கணிசமாக மேம்படும். மேலும், சுற்றியுள்ள 2,100க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களும் இதனால் பயனடைவர்.

இவற்றுடன் சேர்த்து, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ரூ.10,783 கோடி மதிப்பில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மொத்தம் 1,196 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான கட்டமைப்பு விரிவாக்கத்தை உள்ளடக்கிய அனைத்து எட்டுத் திட்டங்களும் வரும் 2029-30ஆம் நிதியாண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்