இந்தித் திணிப்பு, தமிழ் ஒழிப்பு - ரயில்வேக்கு மதுரை எம்.பி. கண்டனம்

இந்தித் திணிப்பு, தமிழ் ஒழிப்பு - ரயில்வேக்கு மதுரை எம்.பி. கண்டனம்

2 mins read
09a9b4d0-4a7e-46f4-a3e6-ccfd381eeb88
மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். - கோப்புப் படம்
Google News Preferred Icon

தமிழைப் புறக்கணித்து ‘இந்தி’ மொழிமீதான விசுவாசத்தை ரயில்வே துறை காட்டுகிறது எனவும், இதனால் மாநில மொழியுரிமையை தாக்கி ‘இந்தி‘ மொழிமீதான விசுவாசத்தை ரயில்வே துறை காட்டுவதாகவும் சாடியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தெற்கு ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தமிழில் கேள்வித்தாள் தரப்படவில்லை என்று சுட்டிய அவர், இந்தி மொழிக்கு  விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏன் இவ்வளவு ஆனந்தம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 10ஆம் தேதியன்று நடத்தப்பட்ட அந்தத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டது என்றும், இதனால் மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற விதிமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார் வெங்கடேசன்.

“தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தொடர்பில் நடத்தப்பட்ட தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்கிற விதிமுறையைத் தள்ளிவிட்டுத் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் அந்தத் தேர்வு நடத்தப்பட்டுவிட்டது,’’ என்றார்.

இது மொழி உரிமைமீதான தாக்குதல் என்ற அவர், ஒன்றிய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையை இது பிரதிபலிப்பதாகக் கூறினார்.

இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறதாகக் கருத்துரைத்த வெங்கடேசன், தமிழ் மொழியில் கேள்வித்தாள் வழங்காமல் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் கேள்வித்தாளுடன் இத்தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் விளக்கினார் வெங்கடேசன்.

குறிப்புச் சொற்கள்