சென்னை: தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான ஆள்சேர்ப்பில் தமிழர்களின் வாய்ப்புகள் பிற மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்காக 6,171 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இம்மாதம் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்நிலையில், இந்த ஆள்சேர்ப்பு அறிக்கையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாய விதி நீக்கப்பட்டுள்ளது.
“மேலும், கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர், கேரளா மற்றும் அந்தமான்-நிகோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதன் மூலம் தமிழக இளையர்களுக்குக் கிடைக்கவேண்டிய தொழில் பழகுநர் வாய்ப்புகள் பிற மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்படும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வழக்கமான விதிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கண்டனத்திற்குரியது.
“கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தெற்கு ரயில்வே துறையில் தமிழர்களின் வேலைவாய்ப்புகளைப் பிற மாநிலத்தவர் பறித்துவந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகே 2019ஆம் ஆண்டில் தமிழக இளையர்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டது. இப்போது அந்த உரிமைக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
“எனவே, தமிழக இளையர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் இந்த அறிக்கையைத் தெற்கு ரயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியைச் சேர்த்து புதிய அறிக்கையை வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்குத் தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

