நூறு இடங்களில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு

2 mins read
a33980f3-fff4-420d-b881-2709560660f7
மொத்தம் நூறு இடங்களில் ரூ.160 கோடி செலவில் இந்த அமைப்பை உருவாக்க உள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவுகுரு பிரபாகரன் குறிப்பிட்டார். - கோப்புப்படம்: ஊடகம்

கோவை: ஜெர்மானிய தொழில்நுட்ப உதவியுடன், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய மழைநீர் சேகரிக்கும் அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநகராட்சி ஆணையர் சிவுகுரு பிரபாகரன், மொத்தம் நூறு இடங்களில் ரூ.160 கோடி செலவில் இந்த அமைப்பை உருவாக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்காகத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது என்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

கோவையில் பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது திடீர் மழைப்பொழிவு ஏற்படுகிறது. சில பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தால்கூட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாழ்வான பகுதிகள் மழைநீரில் மூழ்கிவிடுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மழைநீர் சாக்கடையில் கலந்து, கழிவுநீராக மாறிவிடுகிறது. கோவையில் பெரும்பாலான வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக்கான அமைப்பு இருந்தாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் அரசு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்காததாலும் மழைநீர் வீணாகிறது. நீர்த்தேக்க வசதி இல்லாததால், மழைநீர் வீணாகக் கடலில் கலந்துவிடுகிறது.

இதையடுத்து, கோவை மாநகராட்சியில் நூறு இடங்களில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பிற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நூறு இடங்களிலும் மூன்று அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி, பத்து மீட்டர் ஆழத்துக்கு குழாய் அமைக்கப்படும். ‘ஸ்பாஞ்சு’ போன்ற அமைப்பின் மூலம் மழைநீர் வடிகட்டப்பட்டு கீழே செலுத்தப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இந்த ஜெர்மானியத் தொழில்நுட்பத்தின் மூலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை ரேஸ் கோர்ஸ் வட்டாரத்தில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்