ராமநாதபுரம்: நடிகர் ரஜினிக்கு ஆளுநராகும் வாய்ப்பு தேடி வந்ததாகவும் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் அவரது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் வெற்றிபெறுவது கடினம் என்றார்.
“பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்த அண்ணாமலை ஆற்றல் மிக்கவர். அவர் நல்ல அறிவாளி எனலாம்.
“எதிர்காலத்தில் அவர் அரசியலில் நன்றாக வளர்ச்சி காண்பார். தமிழக அரசியலில் அவர் மிகப்பெரிய இலக்கை அடைவார். “ரஜினி ஆளுநர் பதவியை மட்டுமல்ல, தன்னைத் தேடிவந்த எம்பி பதவி உள்ளிட்ட அனைத்தையும் வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்,” என்றார் சத்யநாராயணா.
அண்ணாமலையைப் பாராட்டியும் விஜய் குறித்து எதிர்மறையாகவும் சத்யநாராயணா கருத்து தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
எனினும், அவர் கூறியதை ரஜினியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் சத்யநாராயணா தமது சொந்தக் கருத்துகளையே வெளிப்படுத்தி உள்ளதாகவும் ரஜினி வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
இதற்கிடையே, சத்யநாராயணாவை விஜய்யின் தவெகவினர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.