சென்னை: மாநிலங்களவையில் காலியாக உள்ள தமிழகத்துக்கான ஆறு உறுப்பினர் இடங்களுக்கு எதிர்வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இம்முறை ஆறு இடங்களில், திமுக நான்கு இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அக்கட்சி சார்பில் வில்சன், சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் கூட்டணிக் கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் களமிறங்குகிறார்.
திமுக வேட்பாளரான கவிஞர் சல்மா, திருச்சி மாவட்டம் பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் கூடுதல் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் வில்சன். 2019 முதல் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் நீண்டகால களப்பணியாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம், அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர், கடந்த 1989, 1996 ஆண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.