சென்னை: பாமகவில் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நேரில் சந்தித்துப் பேசினார்.
இருவரும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசியிருக்க வாய்ப்புள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை சந்தித்துப் பேசியிருந்தார் செல்வப்பெருந்தகை.
பாமகவின் தலைவர் யார் என்பது தொடர்பாக தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், இருவரும் நேருக்கு நேர் மோதி வருகிறார்கள்.
இதனால் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாமக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பதற்கு தெளிவான விடை தெரியாமல் அக்கட்சி நிர்வாகிகள் தடுமாறுகின்றனர்.
அன்புமணி பாஜக கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று ராமதாசை சந்தித்துள்ளார்.
பாமகவில் ஏற்பட்டுள்ள மோதலுக்குத் திமுகதான் காரணம் என அன்புமணி அண்மையில் சாடியிருந்தார். ஆனால் ராமதாஸ் அதை மறுத்தார்.
மேலும் ஒரு பேட்டியில், காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதி பாணியில் தனது இறுதி மூச்சு இருக்கும்வரை தாம் மட்டுமே பாமகவின் தலைவர் என்றும் அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ராமதாஸ்-செல்வப்பெருந்தகை இடையேயான இந்தத் திடீர் சந்திப்பு கூட்டணிக்கான முதல் அச்சாரம் எனக் கருதப்படுகிறது.