சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ், விஜய்யின் தவெக கட்சியில் இணைவது குறித்து தன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் கட்சியினர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
பாமகவில் பெரும்பாலோர் அன்புமணி பக்கம் சென்று விட்டதால், கட்சியில் அன்புமணி வலுவாக உள்ளார். இதைப் பயன்படுத்தி, அவர் வரும் தேர்தலில் போட்டியிட அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், பாமக தனது கையைவிட்டுப் போனதையடுத்து திமுக கூட்டணியில் இணைவதற்கு அவர் தீவிர முயற்சி மேற்கொண்டார். அந்த வாய்ப்பும் எட்டவில்லை.
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு, தன் நிர்வாகிகளிடமும் குடும்பத்தினருடனும் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இப்போது, தவெக தலைவர் விஜய்க்கு இளையர்களின் ஆதரவு அதிகமாக உள்ளதாக, குறிப்பாக, விஜய்க்கு பெண்கள் மத்தியில் பெருவரவேற்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம். அதன் மூலம், ஒரே கல்லில் அன்புமணியையும், திமுக கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் திருமாவளவனையும் வீழ்த்த முடியும் என ஆதரவாளர்கள் ராமதாஸிடம் தெரிவித்ததால், ராமதாஸ் அந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஒரு தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் தவெக தரப்பு, ராமதாஸ் தரப்புடனும் கூட்டணி, இடங்கள், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பு பாமக நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது, “வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை பாமக வைத்துள்ளது. வடமாவட்டங்களில் விஜய்க்கும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், விஜய்யின் நட்சத்திரத் தகுதியும் ஒன்றாக சேரும்போது, மக்களின் ஆதரவும், தேர்தலில் வெற்றிவாய்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கும். இதையெல்லாம் மனத்தில் வைத்தே தவெக கூட்டணி குறித்து ராமதாஸ் பரிசீலனை செய்து வருகிறார்” என்றனர்.
இந்நிலையில், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராமதாஸ் தரப்பு பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அருள் உறுதி செய்திருக்கிறார்.
“தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பு தான். தமிழ்நாட்டில் ராமதாஸ் கை காட்டுகிறவரே அடுத்த முதல்வர். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும்,” என்றார்.
இந்தச் சூழலில் தான் ராமதாஸ் உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, “நல்லது நடக்கட்டும்” என்று தவெக மாநில நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

