ராமேசுவரம்-தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவை: இலங்கை பரிசீலனை

ராமேசுவரம்-தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவை: இலங்கை பரிசீலனை

2 mins read
1bfc86ed-eec9-4e00-aecb-2a97b1768734
இந்தியா, இலங்கைக்கு இடையேயான கப்பல் சேவை, இரு நாடுகளுக்கும் பண்பாட்டு, சமூக, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றார் திரு செல்வம் அடைக்கலநாதன். - கோப்புப் படம்: தினமணி
multi-img1 of 2

ராமேசுவரம்: தமிழகத்தின் ராமேசுவரம், இலங்கையின் தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் விரைவில் தொடங்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், வட்டார அளவிலான இணைப்பை மேம்படுத்துவதுடன், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான கலாசாரப் பரிமாற்றத்திற்கும் பயணிகள் கப்பல் சேவை பெருமளவில் வழிவகுக்கும் என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பாரம்பரியக் கப்பல் சேவை, வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், இது இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பண்பாட்டு, சமூக, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கை என்றார்.

மேலும், இந்த கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள், அதற்கான திட்டங்கள் இலங்கை அரசிடம் உள்ளதா என்பதை துறைமுகங்கள் துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திரு செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் அநுர கருணாதிலக்க, இரு நாடுகளுக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்த விரிவான அறிக்கையும் முழுமையான திட்ட விவரங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக முன்வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

முன்னதாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ராமேசுவரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அன்றைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கான கப்பல் போக்குவரத்துத் திட்டம் ரூ.118 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இந்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் கடந்த ஆண்டு அவர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்