மலையடிப்பட்டி அகழாய்வில் அரிய தொல்பொருள்கள் கண்டெடுப்பு

மலையடிப்பட்டி அகழாய்வில் அரிய தொல்பொருள்கள் கண்டெடுப்பு

2 mins read
7115fa23-ef6a-4385-af9c-d3dac07666ab
மலையடிப்பட்டி தொல்லியல் பணிகள், அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகள் தமிழர்களின் தொன்மையை உலகிற்கு மேலும் பறைசாற்றும் என நம்புவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். - படம்: தினத்தந்தி

சென்னை: தென்காசி அருகே நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலையும் தொழில்துறைச் சிறப்பையும் பறைசாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ளது மலையடிப்பட்டி. இப்பகுதியில் உள்ள தொல்லியல் தளத்தில் கடந்த மூன்று மாதங்களாகத் தீவிர அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் மலையடிப்பட்டி முற்காலத்தில் ஒரு செழிப்பான மனித நாகரிகக் குடியேற்றமாக இருந்ததற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அகழாய்வின்போது கிடைத்த பல்வேறு அரிய பொருள்கள் குறித்து தமிழகத் தொல்லியல் துறை விவரங்களை வெளியிட்டுள்ளது.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான தக்களிகள், வட்டச்சில்லுகள், அழகிய சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், பண்டைய காலத்து இரும்புப் பொருள்கள், செப்பு நாணயங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சங்க காலத்தைச் சேர்ந்த சதுர வடிவ செங்கல் கட்டுமானங்களும் கண்டறியப்பட்டுள்ளன என்றும் முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கறுப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் ஆகியவை தமிழர்களின் உன்னதமான மண்பாண்டக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளன என்றும் தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சங்க காலத்தில் இப்பகுதியில் இரும்பு உருக்குத் தொழிலும் நெசவுத் தொழிற்கூடங்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன என்பதையும் தொல்லியல் ஆய்வுக்குழு உறுதி செய்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மலையடிப்பட்டி தொல்லியல் பணிகள், அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகள் தமிழர்களின் தொன்மையை உலகிற்கு மேலும் பறைசாற்றும் என நம்புவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இந்த அகழாய்வு முடிவுகள், தென்தமிழகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன என்பதில் ஐயமில்லை என்றும் அவர் தமது எக்ஸ் தளப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தொல்லியல் துறை மலையடிப்பட்டியில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு தமிழகத்தின் வரலாற்றுத் தடங்களைக் கண்டறிய செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

“திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் (தவெக) தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்