சென்னை: பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடல் தொடங்கவும் இயல்பாக உரையாடவும் வாசிப்புதான் வாசலாக அமையும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் நூலகப் பாட வேளைகளில் வாசிப்பு இயக்கச் செயல்பாடுகளை நடப்புக் கல்வியாண்டிலும் அமல்படுத்த வேண்டுமென அத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாசிப்பு இயக்கச் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் வாசிப்பின் வாயிலாகச் சமூகச் சிந்தனையைத் தூண்டவும் உணர்வுகளை வெளிக்கொண்டுவரவும் மாபெரும் வாசிப்பு இயக்கம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வாசிப்பு இயக்கத்திற்கான 261 புத்தகங்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
மாணவர்களைக் கதை சொல்லிகளாகவும் எழுத்தாளர்களாகவும் உருவாக்கும் வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

