சென்னை: மூத்த கட்சியான திமுக, ஆளுங்கட்சியுடன் தனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவற்றை ஏற்றுக்கொள்ள ஆளும் தரப்பு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை வாழ்த்திப் பேசிய திரு உதயநிதி, சபாநாயகர் நடுநிலைத் தன்மையோடு செயல்படுவார் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
“முதல்வர் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துள்ளார். இந்த அரசியல் நாகரிகம் சட்டமன்றத்திலும் தொடரவேண்டும். மேலும் நானும் முதல்வர் விஜய்யும் சபாநாயகரும் (பிரபாகரன்) ஒரே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள். ஆனால், திமுகதான் சட்டமன்றத்தில் ‘சீனியர்’. எனவே, நாங்கள் சொல்வதையும் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்று சிரிப்பலைகளுக்கு மத்தியில் குறிப்பிட்டார் உதயநிதி.
மேலும், முதல்வரின் பதவியேற்பு நிகழ்வின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், பாஜக ஆளக்கூடிய மேற்கு வங்க மாநிலத்தில் இதேபோன்ற நிகழ்வில் ‘வந்தே மாதரம்’ பாடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
“தமிழ்நாட்டில் மட்டும் அது பாடப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவது இடத்திற்குத் தள்ளிப்போகக் கூடாது என்பதைத் தற்போதைய அரசு உறுதி செய்ய வேண்டும்,” என்று உதயநிதி வலியுறுத்தினார்.

