தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐஎஸ் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: நால்வர் கைது

2 mins read
2f8672e3-8a00-455a-8c55-f9b1437fb516
(இடமிருந்து) ராஜா அப்துல்லா, ஷேக் தாவுத், அகமது அலி, ஜவஹர் சாதிக். - படங்கள்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் அரபிக் கல்லுாரிகளில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததும் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணையில் உறுதியானது.

கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், சில அரபிக் கல்லுாரிகளும் அவற்றின் கிளைகளும் இயங்கி வருகின்றன.

அண்மையில் இக்கல்லூரிகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டு, சில முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

அவற்றை ஆய்வு செய்தபின்னர், கோவை அரபிக் கல்லுாரியின் நிறுவனர் ஜமீல் பாஷா (49) கைது செய்யப்பட்டார்.

அவர் பேராசிரியர் என்ற போர்வையில் வலம்வந்து, சில இளையர்களைக் கல்லூரியில் சேர்த்து, பின்னர் அவர்களை மூளைச்சலவை செய்ததும், ஐஎஸ் அமைப்பில் சேர்த்து பயங்கரவாத பயிற்சி அளித்ததும் தெரியவந்துள்ளது.

தன்னால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒருவரை, கோவை அரபிக் கல்லூரி முதல்வராகவும், மேலும் இருவரை அக்கல்லூரியின் திருச்சி கிளை, திண்டுக்கல் கிளை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமித்துள்ளார் ஜமீல் பாஷா.

அவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜவஹர் சாதிக்கை (48), முஸ்லிம் இளையர்களை மூளைச்சலவை செய்யும் ஊழியராக பணியமர்த்தினார்.

இந்நிலையில், ஜவஹர் சாதிக், அகமத் அலி, ராஜா அப்துல்லா, ஷேக் தாவூத் ஆகிய நால்வரை என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் சென்னை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

கைதானவர்களில் மற்றொருவரான ஷேக் தாவூத் அளித்துள்ள வாக்குமூலகத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவதே தங்களின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில், அரசு அலுவலகங்கள், கோவில்கள், நீதித்துறை அலுவலகங்களைத் தகர்க்க வேண்டும். இதற்காக, அரபிக் கல்லுாரிகள் நடத்துவது போல, பயங்கரவாத பயிற்சி அளித்து, தற்கொலைப் படைகளை உருவாக்கி வந்தோம்,” என்று அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

விசாரணையின் முடிவில், நான்கு பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜமீன் பாஷாவையும் சேர்த்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் அரபி மொழி கற்றுத் தரப்படும் என சமூக வலைதளம் வாயிலாகவும் ஆங்காங்கே பதாகை வைத்தும் விளம்பரம் செய்து இளையர்களைக் கவர்ந்து, மூளைச்சலவை செய்தது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்