விருதுநகர்: வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வின் போது சுடு மண்ணால் ஆன சிகப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் ஏற்கெனவே கண்ணாடி மணிகள், கல்மணிகள், நாயக்கர் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு நீடித்து வரும் நிலையில் வியாழக்கிழமை அன்று மேற்குறிப்பட்ட சுடுமண் குவளை கண்டெடுக்கப்பட்டது.
இத்தகைய குவளைகளை உணவருந்த அல்லது மண்பாண்டங்களின் மூடியாக முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருகே சாத்தூர் அருகே உள்ளது வெம்பக்கோட்டை. அங்குள்ள விஜய கரிசல் குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
வெம்பக்கோட்டையில் இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.