கோவை: தமிழகத்தில் இனி புதிதாக வாங்கப்படும் வீடு, வீட்டு மனை உள்ளிட்ட சொத்துகளைப் பதிவு செய்யும்போது அவற்றைப் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
வீட்டிலிருந்தவாறே பத்திரங்களை இணையம் (ஆன்லைன்) மூலம் பதிவு செய்யும் வசதியைச் செயல்படுத்த, பத்திரப் பதிவுத் துறை ஆலோசித்து வருகிறது. இதற்காக ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறது தமிழக அரசு. இதற்குப் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ‘ரியல் எஸ்டேட்’ துறைக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். எனினும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நீண்டநேர காத்திருப்பு, அதிக கட்டணம், தரகர்கள் குறுக்கீடு எனப் பல அம்சங்கள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.
இதையடுத்து பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை விரைவாகவும் உயர் தரத்துடனும் வழங்கும் வகையில் ‘ஸ்டார் 3.0’ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.323.45 கோடி செலவாகும் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. முதலில் கோவையில் ‘ஸ்டார் 3.0’ செயல்பாட்டுக்க வரும்.
இதனிடையே, இத்திட்டத்தைச் செயல்படுத்த நான்கு மாவட்டங்களுக்கு ஒரு குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என பத்திரப்பதிவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்துப்பதிவுக்காகத் தாக்கல் செய்யப்படும் அனைத்து ஆவணங்களும் இணைய வழியிலான பதிவுக்கும் தேவைப்படும். அவற்றை இணையம்வழி ‘ஸ்கேன்’ செய்து அனுப்ப வேண்டும்.
பதிவாளருக்கு முழு மனநிறைவு ஏற்படும் வகையில் அனைத்து ஆவணங்களையும் அனுப்ப வேண்டும் என்பதுடன், ஒரு வெப்கேமரா, ஸ்கேன்-அச்சிடும் இயந்திரம், அதிக வேகம் கொண்ட இணைய வசதியும் இதற்கு மிக அவசியம்.
தொடர்புடைய செய்திகள்
இறுதியாக, பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான அரசின் ‘நில வழிகாட்டு மதிப்பீடு’ அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும். அதையும் இணையம் மூலமாகவே பத்திரப்பதிவுத் துறைக்குச் செலுத்திவிடலாம்.
இத்திட்டம் குறித்து கோவை மண்டலப் பத்திரப்பதிவுத் துறை துணைத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், “ஸ்டார் 3.0’ திட்டம் தமிழக அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக விவரம் தெரிந்தவர்கள் எளிதாக அரை மணி நேரத்தில் ஆவணங்களைப் பதிவு செய்யலாம்,” என்றார்.