வில்லங்கமான சொத்துகளுக்குப் பத்திரப்பதிவு கூடாது - ராமதாஸ்

வில்லங்கமான சொத்துகளுக்குப் பத்திரப்பதிவு கூடாது - ராமதாஸ்

2 mins read
73d97412-b692-4ca7-89d8-ce365f04d10a
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: வழக்குகளில் சிக்கியிருக்கும் வில்லங்கச் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அது வழக்கில் இருக்கும் சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். எனவே, வில்லங்கச் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்யும் முறையை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சொத்துகள் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அந்தச் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்யலாம் என்று பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று திரு ராமதாஸ் கூறியுள்ளார்.

வில்லங்கமான சொத்துகள்மீது நீதிமன்றங்கள் எந்த ஆணையையும் பிறப்பிக்காத நிலையில், அதன் விற்பனையைத் தடுக்கக் கூடாது என்று சில வழக்குகளில் நீதிமன்றங்கள் வழிகாட்டியிருப்பதாகவும், வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது. இது சரியான காரணமில்லை என்று திரு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத் துறை செயல்படக் கூடாது.

தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எனவே, சொத்துகள்மீது வழக்குகள் நிலுவையில் இருந்தால், அந்தச் சொத்துகளுக்குப் பத்திரப் பதிவு செய்யலாம் என்ற பத்திரப் பதிவு ஆணையத்தின் உத்தரவு மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று திரு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்