ராமேசுவரம்: இலங்கையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த தமிழக விசைப்படகு ஓட்டுநரை, யாழ்ப்பாண உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகுகளின் ஓட்டுநர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை அரசு தொடங்கியது.
அந்த வகையில், ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை கைப்பற்றிய இலங்கை கடற்படை, காளீஸ்வரன் என்ற படகு ஓட்டுநரையும் முருகானந்தம், முத்துக்குமார், சீமோன், ராஜ், புருக்லீன், சர்ப்ரசாதம் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தது.
இந்த வழக்கில் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 6 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும் விசைப் படகின் ஓட்டுநராகிய காளீஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தது.
காளீஸ்வரனின் சிறை தண்டனையையும், அபராதத்தையும் ரத்து செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் சார்பாக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 6 புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம் காளீஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையை மூன்று மாத சிறை தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
காளீஸ்வரன் ஏற்கெனவே மூன்று மாதத்துக்கு மேல் சிறையில் இருந்துவிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர் காளீஸ்வரன் ஓரிரு நாள்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.