சென்னை: தமிழக அரசின் அனைத்து அரசாணைகளையும் தமிழில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ‘செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்கம்’ அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் சார்பில், புதிய கலைச்சொற்களை உருவாக்கி அவற்றை இணையம் மூலம் அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில், நாமக்கல் கவிஞரின் கொள்ளுப்பேத்தியும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் துணை இயக்குநருமான இரா.மனோன்மணி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழ்ச்சொற்களின் பயன்பாட்டைக் குழந்தைகளிடம் இருந்து தொடங்க வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது என்றார்.
“குழந்தைகளுக்கு சிறு வயது முதற்கொண்டே, அதாவது மழலைக்கல்வி தொடங்கும்போதே நல்ல தமிழ்ச்சொற்களை அறிமுகம் செய்து, தாய் மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் உள்ள கடைப்பலகைகளில் தமிழில் மட்டுமே பெயர்கள் இடம்பெற வேண்டும்.
“அனைத்து அரசாணைகளும் மடல்களும் தமிழில் வெளிவர வேண்டும். இதுவே தமிழ் வளர்ச்சித்துறையிடம் பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கை,” என்றார் இரா.மனோன்மணி.