சென்னை: தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையை அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
மேலும், தென்மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக, தமாகா தவிர திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட 56 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தில் மொத்தமாக எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் இது நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி உள்ள மாநிலங்களுக்குக் கிடைத்துள்ள தண்டனையாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம் என்று தெரிவித்த ஸ்டாலின், இக்காரணத்தால்தான் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.
“இந்த விவகாரத்தில் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் இணைய வேண்டும். தொகுதி மறுவரையறை நடவடிக்கையினால் தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளை குறைப்பது நம் குரலை நசுக்கும் முயற்சி.
தொடர்புடைய செய்திகள்
“இது அரசியல் பிரதிநிதித்துவத்தின் மீதான நேரடி தாக்குதல். இந்த சதியை நாம் முறியடிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை என்ற கத்தி, தென்மாநிலங்களின் தலைக்கு மேல் உள்ளது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்து இக்கூட்டத்தில் சில தீர்மானங்களை அவர் முன்மொழிந்தார்.
“தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்க்கிறது. இது நியாயமற்ற செயல். 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகள் தொடர வேண்டும்.
“தென்மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும். மக்களவை தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும். இதற்கான உறுதியை பிரதமர் அளிக்க வேண்டும்,” என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தவெக போராடும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.