தமிழ்நாட்டில் மது விற்பனைக்குக் கட்டுப்பாடு

தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி

தமிழ்நாட்டில் மது விற்பனைக்குக் கட்டுப்பாடு

1 mins read
e615b24b-136f-4743-841d-4ad2629050e3
ஒருவருக்கு அதிகபட்சமாக 12 புட்டி பீர் மட்டுமே விற்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் நடப்பிற்கு வந்துவிட்டதால் மது விற்பனை தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதனையடுத்து, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம், தங்கம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

அதுபோல, தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களுக்கு மது கொடுத்து அவர்களின் வாக்குகளைக் கவர்வது போன்ற செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தல் ஆணையம் மது விற்பனையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒருவருக்கு எவ்வளவு மது விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்து மதுக்கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம் எனில் ஒருவருக்கு மொத்தம் 4.5 லிட்டர் மட்டுமே விற்கப்பட வேண்டும்.

அதாவது, முழுப் புட்டி (750 மி.லி.) எனில் ஆறும், அரைப் புட்டி (375 மி.லி.) 12ம் அல்லது கால் புட்டி எனில் (180 மி.லி.) 24ம் அதிகபட்சமாக விற்கலாம்.

அதேபோல், ஒருவருக்கு அதிகபட்சம் 7.8 லிட்டர் பீர், அதாவது 12 புட்டிகள் மட்டுமே விற்கப்பட வேண்டும்.

ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக மதுப்புட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால் விசாரணை நடத்தப்பட்டு, துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்