அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு: 500 டயாலிசிஸ் மையங்களை அமைக்க அன்புமணி வலியுறுத்து

அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு: 500 டயாலிசிஸ் மையங்களை அமைக்க அன்புமணி வலியுறுத்து

படம்: மாலை மலர்

05 Oct 2026 - 5:32 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) மையங்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அளவில் சிறுநீரகப் பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது என்றும். தேசிய அளவில் சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு 3.20% ஆக இருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் இது 4.30% ஆக உயர்ந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், தவறான உணவுப் பழக்கம் மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்பதே இதற்கு முதன்மை காரணங்களாகக் கூறப்படுவதாக திரு அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போது தமிழகத்தில் 146 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே டயாலிசிஸ் வசதி உள்ளது. இதனால் பெரும்பான்மையான நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. அங்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்ய ஏறக்குறைய ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவிட்டு கடும் கடன் சுமைக்கு ஆளாகின்றன,” என்று திரு அன்புமணி தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினைக்குத் தீர்வாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் உள்பட 370 மையங்களுடன், கிராமப்புறங்களில் உள்ள 130 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சேர்த்து மொத்தம் 500 டயாலிசிஸ் மையங்களை நிறுவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக 304 மையங்களை அமைக்க ₹608 கோடி மட்டுமே செலவாகும் என்பதால், இதனை உடனடியாகச் செயல்படுத்தி இலவச டயாலிசிஸ் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விரைவு உணவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்