டெல்டாவில் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: திமுக

டெல்டாவில் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: திமுக

2 mins read
511f6e20-3297-4961-975d-850203274a6a
முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) மேட்டூர் அணையைத் திறந்துவைத்து, மலர் தூவி மரியாதை செய்தார். - படம்: தமிழ்நியூஸ் நவ்
Google News Preferred Icon

சென்னை: மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்படாததால், தமிழக டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஏறக்குறைய 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இந்த ஆண்டு தாமதமாகத் திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் தட்டுப்பாடின்றி கடைமடைப் பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சென்றடையக் கூடுதல் நாட்களாகும் என்பதால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்றும் சம்பா, தாளடி சாகுபடிக்கு ஏறக்குறைய 205 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அணையில் தற்போது 54 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தண்ணீர் இருப்பைக் கொண்டு 45 நாள்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும் என்பதால், பயிர்களைக் காப்பாற்ற நிலத்தடி நீரையே நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகத் திரு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

“அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையின்போது, தாமதமாகச் சாகுபடி செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயமும் நிலவுகிறது.

“கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காவிரி உபரி நீர், பருவமழையை மட்டுமே நம்பி இனிவரும் சாகுபடிக் காலம் அமைந்துள்ளதால், டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது,” என்று திரு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்பட்டு, நிலத்தடி நீரை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டத்தோடு செயல்படுத்தப்பட்டதால், நீர்நிலைகள் அதிகமான தண்ணீரைச் சேமிக்கத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது திறக்கப்படும் தண்ணீர் அந்த நீர் சேமிப்பு ஆதாரங்களை நிறைக்குமா என்பதும் சந்தேகமே என அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திமுகமேட்டூர் அணைநெல்உற்பத்திவெளியுறவு அமைச்சர்தண்ணீர்சாகுபடிநாகப்பட்டினம்