கடன் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாகும் அபாயம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

கடன் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாகும் அபாயம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

20 Nov 2026 - 6:56 pm

2 mins read

சென்னை: கடன் கணக்குகளைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதால், வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வருமான வரித்துறையின் நுண்ணறிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஜி.நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர், வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் தங்களது நிதிப் பரிவர்த்தனை அறிக்கைகளை உரிய காலத்திற்குள் எவ்விதப் பிழையுமின்றித் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அறிக்கைகளில் தவறுகள் கண்டறியப்பட்டால், சட்டப்படி அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்த அவர், குறிப்பாக, சேமிப்புக் கணக்குகளில் ரூ.10 லட்சத்திற்கு மேல் நடைபெறும் ரொக்கப் பரிவர்த்தனைகளை மட்டும் கண்காணித்தால் போதாது எனச் சுட்டிக்காட்டினார்.

கடன் கணக்குகள் உள்ளிட்ட பிற கணக்குகளிலும் நடைபெறும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் ஏனெனில், கடன் கணக்குகள் வழியாகக் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சிகள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் திரு நந்தகுமார் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்களில் 42 நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர், நடப்பு ஆண்டிலும் அதேபோல் ஆய்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த ஓரிரு வாரங்களில் சில வங்கிகளில் திடீர் ஆய்வுகள் நடைபெறலாம். எனவே, அதற்கு முன்பாகவே அனைத்து நிதி அறிக்கைகளையும் வங்கிகள் பிழையின்றித் தாக்கல் செய்துவிட வேண்டும் என்றார் அவர்.

மேலும், அறிக்கைகள் தாக்கல் செய்வதில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்கள், சந்தேகங்களைத் தீர்க்க நாடு முழுவதும் வருமான வரித்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க வருமான வரித்துறை தயாராக இருப்பதாகவும் திரு நந்தகுமார் தெரிவித்தார்.

வங்கிகளை அச்சுறுத்துவது தங்களது நோக்கமல்ல என்றும் நாட்டின் நிதி அமைப்பை வலுப்படுத்தவும் பணமோசடியைத் தடுக்கவும் வங்கிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்