சென்னை: கடந்த சில வாரங்களாக நிலத்தடி நீர்மட்டம் திடீரென வேகமாக சரிந்து வருவதை அடுத்து, சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான மாதவரம், அம்பத்துார் உள்ளிட்ட இடங்களில் 16 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற பகுதிகளில் 3 முதல் 10 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது.
அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தாலும், சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் அளவுக்கு பலத்த மழை பெய்யவில்லை என்பதையும் நீர்வள நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, நடப்பாண்டு கோடை வெயில் காலம் முடிவுக்கு வந்தபின்னர், நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும் என்றும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
வழக்கமாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் மாதமும் கணக்கிடப்படும். இதற்காக 200 இடங்களில் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மற்ற ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்தாண்டு நிலத்தடி நீர் மட்டம் சற்றே உயர்ந்தது. அதிகமான நாள்கள் மிதமான மழை பெய்ததால், பூமிக்குள் மழைநீர் இறங்கி நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறையத் துவங்கியது.
பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளது என்றும் அதிகமான நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது என்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“சென்னையில் நாள்தோறும் நூறு கோடி லிட்டர் குடிநீர் விநியோகிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் 107 கோடி லிட்டர் விநியோகிக்கப்படுகிறது.
“இனிவரும் நாள்களில் இந்நடைமுறை சிக்கலின்றிப் பின்பற்றப்படும். எனினும் தென்மேற்குப் பருவமழை கைகொடுத்தால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் வீண் சிக்கல்கள் தவிர்க்கப்படும்,” என குடிநீர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.