வாக்காளர்களை வரவேற்ற இயந்திர மனிதன்

வாக்காளர்களை வரவேற்ற இயந்திர மனிதன்

2 mins read
0ebc7ed4-ef26-4ed0-bb2c-16472f737cc4
வாக்குச்சாவடிக்குச் சென்ற வாக்காளர்களை இயந்திர மனிதன் (ரோபோ) வரவேற்று உபசரித்தது அனைவரையும் கவர்ந்தது. - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

புதுவை: புதுவை மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான அனுபவங்களைப் பெற்றனர்.

அங்கு வாக்குச்சாவடிக்குச் சென்ற வாக்காளர்களை இயந்திர மனிதன் (ரோபோ) வரவேற்று உபசரித்தது அனைவரையும் கவர்ந்தது. அதன் பெயர் நிலா.

புதுவையில் உள்ள மூன்று அரசுப் பள்ளிகள் தனித்துவம் வாய்ந்த வாக்குச்சாவடிகளாக வகைப்படுத்தப்பட்டு, மூன்று பள்ளிகளும் அண்மையில் அழகுபடுத்தப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் வாழைமரம் வைக்கப்பட்டு, தோரணங்கள் கட்டி, தென்னை ஓலைப்பந்தலும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ஏப்ரல் 9ஆம் தேதி (வியாழன்) நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மூன்று பள்ளிகளுக்கு வந்த வாக்காளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

காரணம், அனைவரையும் அங்கிருந்த ஒரு ‘ரோபோ’ நிலா வரவேற்றதுடன், பன்னீர் தெளித்து, செம்பருத்தி பூ வழங்கியது.

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே தீவிர விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம். அத்தகைய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட கட்டளைகளின் மூலம் ‘நிலா’ மக்களுடன் உரையாடுகிறது. மேலும், பல்வேறு மொழிகளில் பேசும் திறன் கொண்ட இந்த ‘ரோபோ’, வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

நிலாவுடன் உரையாடியது வாக்களிக்கும் நடைமுறையை எளிதில் புரிந்துகொள்ள உதவியதாக புதுவை வாக்காளர்கள் தெரிவித்தனர்.

கோவையைச் சேர்ந்த ‘ரோபோ மிரர்’ என்ற நிறுவனம்தான் நிலாவை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் பிரதிநிதி கௌசிக் விழாக்கள், பொது நிகழ்வுகளை மனதிற்கொண்டு நிலா ரோபோவை வடிவமைத்ததாகத் தெரிவித்தார்.

புதுவை தேர்தலின் மூலம், ஜனநாயகக் கடமையை எந்த அளவுக்கு நேர்த்தியாகவும் நவீனமாகவும் மாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்