வீட்டுக்கூரை சூரியஒளி மின்சாரத் திட்டம்: 30,000 விண்ணப்பங்கள் குவிந்தன

வீட்டுக்கூரை சூரியஒளி மின்சாரத் திட்டம்: 30,000 விண்ணப்பங்கள் குவிந்தன

கோப்புப் படம்: தினமணி

28 Oct 2026 - 7:03 pm

1 mins read

கோவை: தமிழ்நாட்டில் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்சக்தித் தகடுகள் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும் நடைமுறைச் சிக்கல்களைக் களையவும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒற்றைச் சாளர இணையத்தளம்’ பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மின்சாரம், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஏப்ரல் வரை 87,000 விண்ணப்பங்களே பெறப்பட்டிருந்த நிலையில், புதிய இணையத்தளம் மூலம் மக்களின் வரவேற்பு பெருமளவில் அதிகரித்துள்ளதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு லட்சம் கூரை சூரிய மின்சக்தித் திட்டத்துக்கான இலக்கை எட்டிவிடமுடியும் என்று அவர் நம்பிக்கையை தெரிவித்தார்.

வரும், 2031ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளில் இத்திட்டத்தை அமல்படுத்துவதே அரசின் நீண்டகால நோக்கம் என்றார் அவர்.

இத்திட்டத்துக்கு மத்திய அரசின் மானியம் கிடைத்த இரண்டு நாள்களுக்குள் மாநில அரசின் மானியத் தொகையும் பயனாளிகளின் கணக்கில் நேரடியாகச் சேரும் புதிய நடைமுறை நடப்புக்கு வந்துள்ளது. இத்திட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் எதிர்கால மின்தேவையைப் பூர்த்தி செய்ய 8,000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. உபரி சூரிய மின்சக்தியைச் சேமித்து நிர்வகிக்க விரைவில் ‘பேட்டரி சேமிப்புக் கொள்கை’ அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிர்மல் குமார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்