ரூ.100 கோடி முறைகேடு; அன்பில் மகேஸ் வீட்டில் காவல்துறை சோதனை

ரூ.100 கோடி முறைகேடு; அன்பில் மகேஸ் வீட்டில் காவல்துறை சோதனை

2 mins read
74c129e8-5fc9-4551-8e71-3bbdfa73671f
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை நடப்பதை அறிந்து, அங்கு சென்ற திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்கு வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. - படம்: இந்து தமிழ் திசை

திருச்சி: தனியார் பள்ளிகளுக்குச் சட்டப்பூர்வ அனுமதிகள் வழங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ. 100 கோடி நிதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீட்டில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் புதன்கிழமை (செப்டம்பர் 16) காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கடந்த ஜூன் மாதம், பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டு, பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், இதர அனுமதிகள், தரம் உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடிக்கு மேல் பணமோசடி செய்த புகாரில் பி.டி. அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விசாரணையில் கிடைத்த முக்கியமான ஆவணங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் அன்பில் மகேஸ் வீட்டில் இச்சோதனை நடைபெற்றது.

திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரின் இல்லத்திற்கு புதன்கிழமை (செப்டம்பர் 16) காலை ஏழு மணியளவில் 20க்கும் மேற்பட்ட சென்னை குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஒரே நேரத்தில் சென்னை, திருச்சியில் உள்ள அவருக்குத் தொடர்புடைய பிற இடங்களிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டன.

சோதனை நடத்தப்படும் தகவல் வெளியானதை அடுத்து, அன்பில் மகேசின் ஆதரவாளர்களும் திமுக தொண்டர்களும் அவரது வீட்டின் முன் திரண்டதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்ற சில நாள்களிலேயே, அன்பில் மகேஸ் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை: திமுக

அன்பில் மகேஸ் வீட்டில் நடைபெறும் சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேசுக்கு ஆதரவாக திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே. என். நேரு அவரது வீட்டுக்கு வந்தார். ஆனால் காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே. என். நேரு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள் இதுபோன்ற சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் இது தமிழக வெற்றி கழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் சாடினார்.

குறிப்புச் சொற்கள்
திமுகஅன்பில் மகேஸ்முறைகேடுமோசடிதனியார்பள்ளிஅனுமதிதிருச்சிசென்னைவீடுசோதனைகாவல்துறை