ரூ.100 கோடிக்கு மதுக்கூட முறைகேடு; மேலும் ஒரு வழக்குப்பதிவு

1 mins read
45637533-ff30-44da-8bff-65afe3a2a6a6
பெரும்பாலான மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கூட மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கூட உரிமத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவதில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கிவரும் மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியதில், 30 முதல் 40 விழுக்காடு வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக தினமணி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மதுக்கூட உரிமங்களைப் பெற்ற ஒருவர் அதை வைத்து அரசுக்குத் தெரியாமல் மூன்றாம் தரப்பினருடன் துணை ஒப்பந்தம் செய்துகொண்டு மோசடி செய்திருப்பதும், மதுவகைகளை கூடுதல் விலைக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமலாக்கத்துறை தரப்பு கூறியுள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறு மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மதுக்கூடங்களை அமைக்க, கட்டட உரிமையாளர்களிடம் ஆட்சேபணை இல்லாச் சான்றிதழ் பெறுவது அவசியம். இந்தச் சான்றிதழைப் பெறுவதிலும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் உரிய அனுமதி பெறாமல் மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. சிவகங்கை, விருதுநகர் பகுதிகளில்தான் இதுபோன்ற முறைகேடுகள் பேரளவில் நடந்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஒரே ஆள் பல பெயர்களில் மதுக்கூட உரிமங்களைப் பெற்றிருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இதையடுத்து, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்